×

மக்களின் வாழ்வியல் முறையை அறிய ஒரே வழி புத்தகங்களை படிப்பதுதான் புத்தக திருவிழாவில் கனிமொழி எம்பி பேச்சு


நெல்லை, மார்ச் 4: மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள ஒரே வழி புத்தகங்களை படிப்பதுதான் என்று புத்தக திருவிழாவில் கனிமொழி எம்பி பேசினார். பாளை வஉசி விளையாட்டு மைதானத்தில் பொருநை நெல்லை 6வது புத்தக திருவிழா நடந்து வருகிறது. 7ம் நாளான நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையானது. மேலும் ராணி அண்ணா பெண்கள் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.  மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி சப்-கலெக்டர் கோகுல் தலைமை வகித்து பேசினார். நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ேகாட்டாட்சியர் சந்திரசேகர் வரவேற்றார். புத்தகம் எனும் போதிமரம் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசினார்.

விழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு புத்தக அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: நெல்லையில் தொடர்ந்து புத்தக திருவிழா நடந்து வருகிறது. நெல்லை மக்களின் இலக்கிய படைப்புகள், அவர்களது ஆர்வம், இலக்கியம் மீது கொண்டுள்ள காதல் ஆகியவற்றால் இந்த புத்தக திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. நெல்லை புத்தக திருவிழாவை போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உணர்வை பரவச் செய்திட வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த புத்தக திருவிழா பன்முக தன்மை கொண்டவையாக உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கு ஏற்ப வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

மக்களிடையே சமத்துவம் வளர வேண்டும் என்பதற்குத்தான் முன்னாள் முதல்வர் கலைஞர், சமத்துவபுரத்தை அனைத்து ஊர்களிலும் கட்டி தந்தார். மக்களிடையே பிரிவினை இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அவை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வரும் பன்முகத்தன்மையை மக்களிடையே எடுத்து கூறும் மையமாகவே புத்தக திருவிழா உள்ளது. நம் வாழ்வியல் முறையே பன்முகதன்மை கொண்டதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என சொல்லக்கூடிய சமூகத்தில் பன்முகத்தன்மை இருந்துள்ளது. இந்த சமூகம் கேட்க மறந்த கேள்விகளை முன்வைக்கும் கருவியாக இலக்கியம் உள்ளது. கேள்வி கேட்க தூண்டுவதாக இலக்கியம், கலை ஆகியவை உள்ளது. மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள ஒரே வழி புத்தகங்களை படிப்பதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்பி, திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன், முன்னாள் எம்பி விஜிலாசத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன் ஐயப்பன், எழுத்தாளர் நாறும்பூநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...