×

ரூ.2 கோடியில் புதுப்பொலிவு பெறுகிறது ஈரடுக்கு மேம்பாலம்

நெல்லை, மார்ச் 4: வரலாற்று சிறப்புமிக்க நெல்லை  ஈரடுக்கு மேம்பாலத்தை புதுப்பொலிவு பெறச் செய்யும் வகையில் ரூ.2.08 கோடியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணியை அப்துல்வஹாப்  எம்எல்ஏ துவக்கி வைத்தார். நெல்லை சந்திப்பையும், டவுனையும்  இணைக்கும் வகையில் ரயில் தண்டவாளங்களுக்கு மேலே வரலாற்று சிறப்புமிக்க ஈரடுக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் அமைக்க 1969ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். ரூ.47 லட்சத்தில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 1973 நவ.13ம் தேதி ஈரடுக்கு மேம்பாலத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.

இந்தப் பாலம் கட்டப்பட்ட போது ஆசியாவிலேயே ரயில் பாதையின் மேலே கட்டப்பட்ட மிகப்பெரிய ஈரடுக்கு  மேம்பாலமாக திகழ்ந்தது. பாலத்தின் மேலே பஸ், லாரி உள்ளிட்ட கனரக  வாகனங்களும், கீழ்ப்பகுதி பாலத்தில் சைக்கிள், ஆட்டோக்கள், பைக்குகள்  உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையிலும் இரண்டு அடுக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு கீழே நெல்லை சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி,  திருச்செந்தூர், தென்காசி, செங்கோட்டை செல்லும் ரயில்கள் தங்கு தடையின்றி  ரயில் போக்குவரத்தை தொடரும் வகையில் திட்டமிட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் கழித்து கடந்த 2000மாவது ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகும் நிலையில்  பாலத்தை சீரமைக்கவும், புதுப்பொலிவு பெறச் செய்யும் வகையிலும் ரூ.2 கோடியே 8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பாலத்தின் கைப்பிடி சுவர்கள், சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட உள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த சீரமைப்பு பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இன்றி இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான  சீரமைப்பு பணியை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல்வஹாப் துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப்  பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன், சாலை ஆய்வாளர்கள்  முத்துக்குமாரசாமி, கண்ணன், மலைப்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் பெயர் எப்படி வந்தது?
ஈரடுக்கு பாலம் திறப்பு விழாவில் அப்போதைய முதல்வர் கலைஞர் பேசுகையில் ‘‘திருக்குறள் முதல் அடி 4 சீர்களையும், 2வது  அடி 3 சீர்களையும் கொண்டதாகும். அதுபோல் இந்த நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், பெரிய  பாலம் என்றும், அதற்கு கீழே சிறிய பாலம் என 2 அடுக்குகளை கொண்டதால், இதற்கு  திருவள்ளுவர் மேம்பாலம்’’ என பெயர் சூட்டுவதாக அறிவித்தார்.

Tags : Erudku ,
× RELATED திருவள்ளுவர் மேம்பாலத்தில் இடம்...