மாவட்டந்தோறும் அரசு தலைமை மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையங்கள் திறக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ராமநாதபுரம், மார்ச் 4:  ராமநாதபுரம், பரமக்குடி சுகாதார மாவட்டங்களில் ரூ.3.88 கோடியில் புதியதாக கட்டப்பட்ட 7 கட்டிடங்கள் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பேசும்போது, ‘‘வளரிளம் பருவத்திற்கான மாதிரி சிகிச்சை மையம் மற்றும் மேலாண்மை மையம் முதற்கட்டமாக ராமநாதபுரம், செங்கல்பட்டு, திருச்சி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் உச்சிப்புளியில் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள  25 மாவட்டங்களில் படிப்படியாக திறக்கப்படும்.

இத்திட்டத்தில் 10 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர், மாணவியர், திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். மேலும் ஊட்டச்சத்து, பாலியல், உடல், மனம் ஆரோக்கியம், மனநலம், பாலின வன்முறை, போதை பொருள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு செய்யப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களால் சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மக்கள் தேவை உணர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. சென்னை, மதுரையில் கருத்தரிப்பு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் துவங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட தலை நகரங்களிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கருத்தரித்தல் மையப்பிரிவு துவங்கப்படும். மேலும் சேதமடைந்த நிலையிலுள்ள அரசு மருத்துவமணை பழைய கட்டிடங்கள், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் மருத்துவமனைகள், துணை சுகாதாரநிலையங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்’’என்றார்.

Related Stories: