கீழக்கரை பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டும் அமைச்சரிடம் எம்எல்ஏ தலைமையில் கோரிக்கை

கீழக்கரை, மார்ச் 4: கீழக்கரை பகுதியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டும் என அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை மனுவாக தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைப்பதற்கு வருகை புரிந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமையில் கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானா ஆபிதா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது, ‘‘கீழக்கரை அரசு மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த நிலையில் கீழக்கரை சுற்று வட்டார பகுதில் உள்ள காஞ்சிரங்குடி, நத்தம், குளபதம், கும்பிடுமதுரை, மாயாகுளம், முள்ளுவாடி, தில்லையேந்தல் போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மருத்துவத்திற்காக கீழக்கரை அரசு மருத்துவமனையையே நாடி வருகின்றனர்.ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த காலத்தில் இருந்தே அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. தற்போது அரசு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்து வருகிறது.

மேலும், அரசு மருத்துவமனை மிகவும் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடனே மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். எனவே மருத்துவமனையை நவீன முறையில் புதிய கட்டிடம் அமைத்து தரவும், மேலும் தளவாடப்பொருட்கள் மற்றும் படுக்கை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது. அதனை கூடுதலாக வழங்கவும், கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கீழ்காணுமாறு அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்து தர வேண்டும்.  நவீன எக்ஸ்ரே பரிசோதனை நிலையம் இ.சி.ஜி.கருவி அமைத்தல் இரத்த வகை சேமிப்பு அறை போன்ற நவீன வசதிகளை அமைத்து தர வேண்டும். மேலும் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பழைய உரக்கிடங்கில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு 16 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கு நிதி ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது கீழக்கரை நகர் தி.மு.க மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் ஹாஜா சுஹைபு, நசீருதீன், பைரோஸ், காயத்ரி, சூரியகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: