திருப்பரங்குன்றம், மார்ச் 4: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோற்றவர்கள் விரக்தியில் பேசுகிறார்கள் என, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பு இணைந்து நடத்திய 14வது சர்வதேச ஆவணப்பட திருவிழா கடந்த 1ம் தேதி பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இதில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 20 ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறந்த ஆவணப்படங்களுக்கான விருதுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘சென்னையில் அப்துல்கலாம், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்க முதல்வர் ஒப்புதல் கொடுத்துள்ளார். அதன்படி விரைவில் இரு தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. மெரினா கடற்கரையில் கடந்த ஆட்சியில் அதிமுகவின் சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக்கின்றனர். இதுகுறித்து யாரும் பேசுவதும் இல்லை. ஆனால் பேனா நினைவு சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது. அது கட்சியின் சின்னம் கிடையாது. ஆனால் இரட்டை இலை ஒரு கட்சியின் சின்னம். அது தான் தவறு’’ என்றார்.ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘தோல்வியுற்றவர்கள் சொல்லும் கதை குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல என்ற கதை தான். தோல்வியின் விரக்தியில் பேசுகிறார்கள்’’ என்றார்.