×

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மீனவர்கள் - விசைப்படகு உரிமையாளர்கள் பிரச்னைக்கு சுமூகத்தீர்வு

தூத்துக்குடி, மார்ச் 3: தூத்துக்குடி மீனவர்களுக்கும், விசைப்படகு உரிமையாளர்களுக்கும் இடையான பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள வலைகட்டும் தளம், படகு ஓட்டுநர் அறை, மீன் பதப்படுத்தும் இடம், அரசு பனிக்கட்டி தயாரிக்கும் ஆலை மற்றும் பாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள், டீசல் பல்க், படகு பழுது பார்க்கும் இடம், மீனவர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகம், மீன் ஏலக்கூடம் ஆகிய மீனவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு தேவையான வசதிகள் தொடர்பாக மீனவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறை, மீனவ பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. இதில் கூடுதலாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக அமைக்கப்படும் படகு நிறுத்தம் இடம், மே இறுதிக்குள் பணிகள் முடிந்து மீன்பிடி தடை காலம் முடிவுற்ற பின் திறக்கப்பட்டு படகுகள் நிறுத்தப்படும். தூத்துக்குடி நகரம் முழுவதுமாக 22 பனிக்கட்டி தயாரிக்கும் நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில் பனிக்கட்டி தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஆய்வின்போது தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் வையோலா மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...