கம்பம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி நகர்மன்ற தலைவர் ஆய்வு

கம்பம்: கம்பம் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியை நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார். கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடலூர் அருகே லோயர்கேம்பில் 1955ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. பெரியாறிலிருந்து வரும் தண்ணீரை தடுப்பணை கட்டி தடுத்து நிறுத்தி, நீரேற்று நிலையம் மூலம் ராட்சத தொட்டிகளில் தேக்கி வைத்து, சுத்திகரிக்கப்பட்டு பின்னர் லோயர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடலூர், கம்பம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2007-2008 முதல் புதுப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளடக்கிய மூன்று பேரூராட்சிகள், நான்கு கிராமப்பஞ்சாயத்துக்களுக்கும் (கே.பி.டி. திட்டம் முலம்) இங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரூ 1296 கோடி மதிப்பில் அம்ருட் திட்டத்தின் கீழ் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து முல்லைப்பெரியாறு தண்ணீரை மதுரை மாநகருக்கு கொண்டு செல்லும் மதுரை பெருநகர குடிநீர் திட்டத்ததிறிகான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரை பெருநகர குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கம்பம் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை.கடந்த 2 நட்களாக கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணியை கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், நகராட்சி பொறியாளர் பன்னீர் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கம்பம் மற்றும் கூடலூர் சாலை விரிவாக்கப்பகுதி என 2 பகுதிகளில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் பணிகள் முடித்து வழக்கம்போல் தண்ணீர் சப்ளை செய்யப்படும், என்றனர்.நிகழ்ச்சியின் போது திமுக மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன், நகர்மன்ற உறுப்பினர் பார்த்திபன், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: