அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞரிடம் மோசடி: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், மார்ச் 2: சப்-கலெக்டர் எனக்கூறி பட்டதாரி இளைஞரிடம் பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தை சேர்ந்த பலர் மனு அளித்தனர்.

அதில் அணைக்கட்டு தாலுகா சீலேரி கிராமத்தை சேர்ந்த காமாட்சி (80) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘எனது கணவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கண்ணன். எனக்கு 3 மகள்கள். அவர்களில் ஒரு மகள் இறந்துவிட்டாள். நானும் எனது கணவரும் 2வது மகளின் வீட்டில் வசித்து வந்தோம். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாதபோது எனது 3வது மகள் வந்து எனது கணவரை அழைத்துச்சென்றுவிட்டாள். அவரது வங்கி கணக்கையும் முடக்கிவிட்டு புதிய கணக்கை தொடங்கி அவரிடம் இருந்து பென்ஷன் பணம் பெறுகிறார். இதனால் கடந்த 3 மாதங்களாக சாப்பாடு மற்றும் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்படுகிறேன். எனவே எனது கணவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

லத்தேரி அடுத்த காளாம்பட்டை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சக்கரவர்த்தி(30) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘செல்லப்பிராணிகள் தொடர்பான எனது யூடியூப் சேனலை பார்த்து சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் என்னை போனில் தொடர்புகொண்டார். அவர் தன்னை ராணிப்பேட்டை சப்-கலெக்டர் விஜியன் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் ஒரு நாள் அரசு வேலை அல்லது வங்கி கடன் தேவைப்பட்டால் தன்னிடம் தொடர்புகொள்ளும்படி தெரிவித்தார். அவரை நம்பி அரசு வேலைக்கேட்டேன்.

அதற்காக ரூ.70 ஆயிரம் என்னிடம் இருந்து போன் பே மூலம் பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் என்னிடம் ஒருவரை அனுப்பி வளர்ப்பு நாயை விலைக்கு வாங்கினார். ஆனால் அதற்கான பணம் தராமல் இழுத்தடித்து வந்தார். ஆனால் அதன்பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. இதுகுறித்து சிலரிடம் விசாரித்தபோது என்னிடம் அந்த நபர் சப்-கலெக்டர் எனக்கூறி பணத்தை ஏமாற்றியதுதெரிந்தது. எனவே அந்த நபரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

காட்பாடி அடுத்த ஒட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவீரர் ஏமநாதன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி பஸ்சில் பயணம் செய்தபோது பையில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருடு போனது. இது தொடர்பாக திருவலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. மேலும் நகையும் மீட்டு தரவில்லை. இதனால் நானும் என்னுடைய மனைவியும் வயதான காலத்தில் மிகவும் அவதி ஆளாகி வருகிறோம். மருத்துவ செலவுக்கு கூட போதிய பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நகைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories: