×

சென்னையில் இருந்து டிரான்ஸ்பரில் வந்த பெண் அதிகாரியை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி: வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி

திருவண்ணாமலை, மார்ச் 2: திருவண்ணாமலையில் சுற்றுலாத்துறையின் யாத்ரி நிவாஸ் விடுதியில் கைதான போலி ஐஏஎஸ் அதிகாரி, சென்னையில் இருந்து டிரான்ஸ்பரில் வந்த பெண் அதிகாரியை பணம் கேட்டு மிரட்டியதும், வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டது போன்ற பரபரப்பு தகவல்கள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்கம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் யாத்ரி நிவாஸ் விடுதியில் கடந்த 27ம் தேதி இரவு ஐஏஎஸ் அதிகாரி என அடையாள அட்டையை காண்பித்து ஒருவர் தங்கினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்த சுபாஷ்(29) என்பதும், ஐஏஎஸ் அதிகாரி எனவும், ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளராக பணியாற்றுவதாகவும் நாடகமாடி மோசடியில் ஈடுபட்டதால் சென்னை மதுரவாயில் போலீசாரால் கைதாகி சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன்படி சென்னையில் விஜிலென்ஸ் பெண் அதிகாரியை போனில் மிரட்டியதாக இவர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதும் போலீசாரால் தேடப்படுபவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ஐஏஎஸ் அதிகாரி, ரிப்போர்டர் உள்ளிட்ட பல்வேறு போலி ஐடி கார்டுகள் சிக்கின.

தொடர்ந்து சுபாஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. திருவண்ணாமலை வானவில் நகரை சேர்ந்த போளூரில் மின்வாரிய உதவி பொறியாளராக பணிபுரியும் சரிதா என்பவரிடம் நான்தான் டிரான்ஸ்பர் வாங்கி தந்தேன் எனக்கூறி பணம் கேட்டு சுபாஷ் மிரட்டி உள்ளார். மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த மேலும் 2 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போளூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் சரிதாவின் கணவர் சவுந்திரராஜன், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், ‘சென்னையில் உதவி பொறியாளராக வேலை செய்த எனது மனைவி சரிதா, போளூருக்கு டிரான்ஸ்பரில் வந்த விபரங்களை தெரிந்து கொண்டு, தனது முயற்சியால் தான் நடந்தது என சுபாஷ் போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வருகிறார்’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷை நேற்று திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கட்டுக்கட்டாக போலி ஐடி கார்டுகள்
திருவண்ணாமலையில் கைதான போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷிடம் 10க்கும் மேற்பட்ட போலி ஐடி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளர், உள்துறை துணை செயலாளர், பொது சுகாதாரத்துறையில் சுகாதாரத்துறை ஆய்வாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த ஐடி கார்டுகள் இருந்தன. அதேபோல், 2 டிரைவிவ் லைசன்ஸ், 2 பான்கார்டுகள், 4 ஆதார் கார்டுகளும் சிக்கின. மேலும், தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு செய்தியாளர் எனவும், கிரைம் வார பத்திரிகை ரிப்போர்டர் எனவும் 2 ஐடி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த போலி ஐடி கார்டுகளை பயன்படுத்தி பல இடங்களில் ஏராளமான மோசடிகளை சுபாஷ் அரங்கேற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால், இந்த நபரை சென்னை போலீசில் ஒப்படைத்து தொடர் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதையொட்டி, சென்னையில் நிலுவை வழக்கில் சுபாஷை கைது செய்து கஸ்டடி எடுக்கவும் போலீஸ் தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. போலி ஐஏஎஸ் அதிகாரி என கைதாகி சிறைக்கு சென்று திரும்பிய பிறகும், தொடர்ந்து சுபாஷ் மோசடியில் ஈடுபட்டிருப்பதால், இவருக்கு பின்னணியில் வேறு சில மோசடி ஆசாமிகளும் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வாலிபர்கள் அரசு வேலைக்கு பணம் கொடுத்தனரா?
திருவண்ணாமலையில் யாத்ரி நிவாஸ் விடுதியில் சுபாஷ் தங்கியிருந்தபோது, 4 வாலிபர்கள் அடுத்தடுத்து பலமுறை நேரில் வந்து அவரை சந்தித்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் அரசு வேலைக்காக சுபாஷிடம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வாலிபர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வேறு யாரிடமாவது பணத்தை பெற்று சுபாஷிடம் கொடுத்தனரா? எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...