ஆண்டிபட்டி பேரூராட்சியில் ₹1.40 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தீர்மானம் நிறைவேற்றம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் கலைஞர் நகர்புற மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் வார்டு கவுன்சிலர்களின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பொன்.சந்திரகலா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜோதி, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு அடிப்படை வசதி, வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கலைஞர் நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தில் வார்டு எண் 2, 11, 4, 6, 3, 5, உள்ளிட்ட வார்டுகளில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து மதிப்பிலான பணிகளுக்கு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: