குண்டும் குழியுமாக கிடந்த பேரையூர் சாலை உடனடியாக சீரமைப்பு

பேரையூர்: குண்டும் குழியுமாக இருந்த பேரையூர்-உசிலம்பட்டி சாலை தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. பேரையூர்-உசிலம்பட்டி சாலை மங்கல்ரேவு முதல் கணவாய்பட்டி வரை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். இது குறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மங்கல்ரேவு முதல் சின்னக்கட்டளை வரை பேரையூர் நெடுஞ்சாலைத்துறை எல்கைக்கு உட்பட்ட தார்ச்சாலைகள் உடனடியாக நேற்று சீரமைக்கப்பட்டன.

சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் தார் கலவை கொட்டப்பட்டு ரோலர்மூலம் செப்பனிடப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், தினகரன் நாளிதழுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் சின்னக்கட்டளை சொர்ண முத்துமாரியம்மன்கோவில் அருகில் ஏற்பட்ட பள்ளங்களை சீர் செய்து தார்ச்சாலை அமைத்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர் கூறுகையில், இந்த சாலை அருகிலுள்ள இருபுறங்களும், மேடாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் முழுவதும் தேங்கிவிடுகிறது.

மேலும் இந்த சாலையை பலமுறை மேடாக போட்டாலும் மழைத்தண்ணீர் கடந்து செல்ல வழியில்லாததால் சாலையில் தேங்கி மீண்டும் பள்ளங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையின் இருபுறங்களிலும் இடையூறு இல்லாமல் வாறுகால் அமைத்து சரி செய்ய வேண்டும், அப்போதுதான் இந்த தார்சாலைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றார்.

Related Stories: