திண்டுக்கல்லில் பக்தர்கள் திரளும் திருவிழாசிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதையடுத்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (மார்ச் 3) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் தங்கள் வேண்டுதல்களின் அடிப்படையில் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக மார்ச் 7ம் தேதி தெப்பதிருவிழாவுடன் மாசி பெருந்திருவிழா நிறைவடைகிறது. கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.

Related Stories: