கோயிலுக்கு பால்குடம், தீர்த்தக்குடம் எடுக்க காவிரி ஆற்றின் கரையோரம் தண்ணீர் ஓடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிருஷ்ணராயபுரம், மார்ச் 2: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் திருவிழா சீசன் தொடங்க உள்ள நிலையில் லாலாப்பேட்டை பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தண்ணீர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, முன் பகுதிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரியமாக ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் தான் திருவிழா சீசன் மாதங்கள் ஆகும்.

இந்த மூன்று மாதங்களில் பட்டிதொட்டிகளில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். விழா காலங்களில் தீர்த்தகுடம் , பால்குடம், அக்னிசட்டி , அலகு குத்துதல் போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் காவிரி ஆற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு தண்ணீர் எடுத்து வருவார்கள். இதில் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 கிராம மக்கள் கோயில் கும்பாபிஷேகம் என்றால் லாலாப்பேட்டை காவிரி ஆற்றுக்கு வந்து தான் புனிதநீர் எடுத்து செல்வார்கள்.

அதேபோல இறந்தவர்களுக்கு சடங்கு மற்றும் தர்பணம் காவிரி ஆற்றில் தான் நடத்துவார்கள். கங்கை போல புனித நதியாக காவிரியை ஏழை மக்கள் கருதுகின்றனர். ஆடி மாதங்களில் கோயில் விஷேச நிகழ்ச்சிக்கும் காவிரி ஆற்றில் தான் நடக்கும். 50 கிராம மக்கள் பயன்படுத்தும் காவிரியில் இத்தனை ஆண்டுகளாக தண்ணீர் முன்பகுதியில் சென்றது. பக்தர்களும் வந்து நீராட வசதியாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பெருக்கால் தண்ணீர் சென்ற தடம் இடம் மாறி மணல் அள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தள்ளி தண்ணீர் செல்கிறது. இதனால் காவிரியில் குளிக்க மற்றும் தீர்த்தகுடம் எடுப்பவர்கள் 500 மீட்டர் தூரம் மணலில் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டி உள்ளது. இதனால் வயதானவர்கள், மற்றும் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் சிரமபடுகின்றனர்.

திருவிழா சீசன் சமயத்தில் அதிகாலையில் தீர்த்தகுடம் எடுப்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்கள். எனவே காவிரியில் முன்பகுதியில் தண்ணீர் செல்லும் வகையில் வழிவகை செய்து கொடுத்தால் அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும் என கருதுகின்றனர். எனவே திருவிழா சீசன் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் அவசர தேவையாக கருதி செய்து கொடுக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: