நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் மூலம் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பாடு

நெல்லை, மார்ச் 2:  நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் மூலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பாடு அடைந்து வருகின்றனர். இத்திட்டப் பணிகள் குறித்து விளக்க காட்சிகளுடன் நெல்லை புத்தக கண்காட்சி அரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் கற்கும் திறன் மாணவர்களுக்கு வெகுவாக குறைந்தது. குறிப்பாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால் தொடக்க நிலை கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் கற்கும் திறன் குறைந்தது கண்டறியப்பட்டது.

 

இதையடுத்து மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித்திட்டம் மற்றம் எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது. இதை கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் 1 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் கற்கும் ஆர்வம் அதிகரித்துவருகிறது. இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் மூலம் தன்னார்வலர்கள் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இருப்பிட பகுதிக்கே சென்று தினமும் கற்பித்தல் பணியை மாலை, இரவு நேரங்களில் மேற்கொள்கின்றனர்.

பெரும்பாலும் புத்தகங்களை தவிர்த்து கல்வி உபகணரங்கள், பொம்மைகள், எளிய கற்பித்தல் முறைகளை பின்பற்றுவதால் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பயின்று புரிந்துகொள்கின்றனர். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடக்க நிலை இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணியை 10ம் வகுப்பு தகுதியுடைய தன்னார்வலர்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்தொடக்க நிலை கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்சம் பிளஸ்2 தகுதியுள்ள தன்னார்வலர்கள் இல்லம் தேடிச்சென்று கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றனர்.

 நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட கற்பித்தல் பணியில் 2,400 தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களிடம் சுமார் 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி சில பகுதிகளில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் கற்க வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் நெல்லையில் தற்போது நடைபெறும் பொருநை புத்தக கண்காட்சியில் சிறப்பு அரங்கில் விளக்க நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

 நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் இருந்தும் தினமும் ஒவ்வொரு வட்டாரப் பகுதியை சேர்ந்த இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், அனைவருக்கும் கல்வித்திட்ட அலுவலர்கள் முகாமிட்டு இத்திட்ட செயல்பாடுகள் மற்றும் பலன்கள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர். தொலைக்காட்சி குறும்படங்கள் மற்றும் மாதிரி பொம்மைகள், கல்வி உபகரணங்கள் மூலமும் விளக்கப்படுகிறது. மேலும் இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித்திட்ட செல்பி பாயின்டில் மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Related Stories: