×

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி அடியோடு முடங்கியது

தூத்துக்குடி, மார்ச் 2: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில்  இருந்து காலை வரை மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை 8 மணி வரை விட்டு விட்டு இடி, மின்னலுடன் கொட்டியது. இதனால் மாநகரில்  தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமத்துடன்  சென்றனர். இந்த மழை காரணமாக தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சகதிக்குளமாக  மாறியது.

அதேபோல் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த திடீர் மழை காரணமாக உப்பளங்களில் மழைநீர் தேங்கியது. பாத்திகள் நீரில் மூழ்கின. இதனால்  உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடந்து வந்த நிலையில், விடியவிடிய பெய்த மழை காரணமாக  மீண்டும் உப்பு உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உப்பளங்களில் உள்ள பாத்திகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மீண்டும் உப்பு உற்பத்திக்கு  அடுத்த ஒருவார காலம் வரையில் ஆகும் என தெரிகிறது.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!