×

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வைகுண்டம், மார்ச் 2: நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான பிரசித்திப் பெற்ற ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில், ஆண்டுதோறும் மாசி பிரமோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான பிரமோற்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். 7:30 மணிக்கு கொடிபட்டம் சுற்றி எடுத்து வரப்பட்டு தீபாராதனைக்கு பிறகு கொடியேற்றப்பட்டது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ திருவிழாவில், தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 5ம் தேதி கருட வாகனத்தில் சுவாமி பொழிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. வருகிற 9ம் தேதி திருவிழாவின் சிகரமான பிரமோற்சவ தேரோட்டம் நடைபெறுகிறது. 10ம் தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும், சுவாமி பொழிந்துநின்ற பிரானும் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

Tags : Masi Pramotsava festival ,Alwar Thirunagari Adinathar Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் மாசி...