×

(வேலூர்) ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஊசூர் அருகே அரசுக்கு சொந்தமான இடங்களில்

அணைக்கட்டு, மார்ச்.1: ஊசூர் அருகே அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த சேக்கனூர் கிராம எல்லையில் மலைக்கோடி- ஊசூர் செல்லக்கூடிய சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அரசு வகைப்பாடு இடங்கள், கால்வாய்கள் உள்ளது. அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்ட சிலர் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க அணைக்கட்டு தாசில்தாருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று மாலை அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வேலூர் பிடிஓ வின்சென்ட் ரமேஷ்பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நெடுஞ்சாலை துறையின் இடத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை ஒட்டி போட்டிருந்த தகர சீட்டுகளை அகற்றி அப்புறப்படுத்தினர். சில கடைகளில் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு அவர்களே அகற்றி விட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் இந்த பகுதியில் கட்டியுள்ள பலரது வீடுகளும் ஆக்கிரமிப்பில்தான் உள்ளது.

அதனையும் அகற்ற வேண்டும் என அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சர்வேயர் வர வைக்கப்பட்டு அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்கள், கால்வாய்கள் சர்வே செய்யப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்கள் மாற்று இடத்திற்கு சென்றதும் அந்த இடம் முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கால்வாய் ஆக்கிரமிப்பு இடங்கள் உள்ளிட்டவைகள் உடனடியாக அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போதும், அளவீடு செய்யும் பணியின் போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி அளவீடு செய்யும் பணி மாலையில் தொடங்கி இரவு ஏழு மணி வரை நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பணியின்போது ஊராட்சி மன்ற தலைவர் மாலதிசுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, விஏஓக்கள் கோமதி, சங்கர்தயாளன், சர்வேயர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் உடன் இருந்தனர். அரியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Vellore ,Usur ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!