×

தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதியில் ₹137.71 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேயர் ஜெகன் பெரியசாமி அனுமதி

தூத்துக்குடி, மார்ச் 1: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கூடுதலாக 10 பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இணைக்கப்பட்ட மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ₹137.71 கோடி மதிப்பில் மேற்கொள்ள அனுமதி வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் டெங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9வது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை பிடிக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் சிறிய கோயில்களில் அன்னதானம் போன்றவற்றுக்கு பணம் செலுத்தினால்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே கோயில்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க வேண்டும். லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் திட்ட பணிகள் முடிவடைந்த பிறகு சாலை அமைக்க வேண்டும். குப்பை அள்ளுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லை. அதனை சரி செய்ய வேண்டும் என்றனர்.

பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மாநகராட்சி பகுதியில் உள்ள 10 பள்ளிகளுக்கு கூடுதலாக காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்று வரும் 4ம்தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டும் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக இன்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதேபோன்று மாநகராட்சியில் பல்வேறு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஆக்கிரமிப்பில் இருந்த பூங்காக்களும் மீட்கப்பட்டுள்ளன. தருவைகுளம் குப்பை கிடங்குக்கு பின்புறம் கடற்கரை வரை சுத்தம் செய்யப்பட உள்ளது. மடத்தூர் முதல் கடற்கரை வரை சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் 75%ம் முடிவடைந்துள்ளது. மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 300பேர் உள்ளனர். தினமும் 150பேர் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று காய்ச்சல் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் அதிகமாக காய்ச்சல் தென்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் தனிநபருக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மாநகராட்சியை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக செடிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதனை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக போடப்பட்டுள்ள கருப்பு நிற குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்துவிட்டு பரிசோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளோம் என்றார். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் குமார், மாநகர இன்ஜினியர் சரவணன், மாநகராட்சி உதவி இன்ஜினியர் பிரின்ஸ், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Mayor ,Jagan Periyaswamy ,Thoothukudi Corporation ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்