×

தூத்துக்குடி மாநகராட்சியில் குறைகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்

தூத்துக்குடி,மார்ச்1: தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தங்களது பகுதிகளில் உள்ள பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்து தெரியப்படுத்த வாட்ஸ்அப் புகார் எண் ஏற்கனவே இயங்கி வருகிறது. இதில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் பிரச்னைகளையும் குறைகளையும் அதிகாரிகள் உடனுக்குடன் தெரிந்து துரித நடவடிக்கை எடுக்க வசதியாக புதிய செயலி வடிவமைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கார்ப்பரேஷன் என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைலில் இருந்து கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதனை இன்ஸ்டால் செய்து, லாக் இன் செய்து தங்களது குறைகளை இருக்கும் இடத்தில் இருந்தே அல்லது குறைகள் இருக்கும் பகுதிகளில் இருந்தே புகார்களை தெரிவிக்கலாம்.
 
அதிகாரிகள் அதில் இணைக்கப்பட்டுள்ள கூகுள்மேப் உதவியுடன் உடனடியாக குறைகள் உள்ள பகுதிகளை அறிந்து கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியும். இவற்றை கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் அதே நேரத்திலேயே பார்வையிட்டு தெரிந்து கொள்ள முடியும் என்ற விதத்தில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்,  ‘தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக \”தூத்துக்குடி கார்ப்பரேஷன்\” என்ற செயலியை (ஆப்) புகார்கள் மற்றும் குறைகள் தெரிவிக்க அறிமுகப்படுத்தி உள்ளோம். இதனை தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் முதல்வர் தொடங்கி வைத்து உள்ளார். இந்த செயலி 20-வது வார்டில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அனைத்து வார்டுகளுக்கும் இந்த செயலி விரிவுபடுத்தப்படும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று கூறினார்.

Tags : Thoothukudi Corporation ,
× RELATED தூத்துக்குடியில் சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் பிடிபட்டன