புதுக்கோட்டை மாவட்டத்தில் 17.61 மி.மீ. அளவு மழை கூடுதலாக பதிவாகி உள்ளது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இயல்பான மழையளவான 41.50 மி.மீ-க்கு 59.11 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. குளிர்கால பருவத்தில் இதுநாள் வரையில் 17.61 மி.மீ கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. பயிர் சாகுபடி, 2022-2023ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் முடிய நெல் 97491 ஹெக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1833 ஹெக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 3864 ஹெக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 12222 ஹெக்டர் பரப்பிலும், கரும்பு 2146 ஹெக்டர் பரப்பளவிலும், பருத்தி 222 ஹெக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12541 ஹெக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இடுபொருட்கள், மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 80.717 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 34.966 மெ.டன் பயறு விதைகளும், 2.914 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 1.710 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.902 மெ.டன் எள் விதைகளும், 3.870 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உர இருப்பு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பிப்ரவரி-2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 1230 மெ.டன்களுக்கு, இதுவரை 520 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: