நாமக்கல்: நாமக்கல்லில் மாபெரும் புத்தக திருவிழா, நேற்று துவங்கியது. இதில் கலெக்டர், எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் சார்பில், மாபெரும் புத்தக திருவிழா துவக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘புத்தகங்களை வாசிப்பதன் மூலம், பல்வேறு செய்திகளை தெரிந்துகொள்ள முடியும். பல்வேறு இன மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். மாணவ, மாணவிகள் புத்தகத்தை வாசிப்பதன் மூலம், பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும்’ என்றார்.
நாமக்கல் எம்பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் நகர்மன்ற தலைவர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினரும், மேற்கு நகர திமுக செயலாளருமான சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் நந்தகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், தமிழ் ஆசிரியர் நாராயண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் நன்றி கூறினர். புத்தக திருவிழா வரும் 10ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி போன்றவை நடைபெறுகிறது.
தினமும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, கவிதைப்போட்டி, படம் பார்த்து கதை சொல்தல், வினாடிவினா, மாறுவேடப் போட்டி மற்றும் நாடகம் உள்ளிட்ட போட்டிகள் போன்றவை நடைபெறுகிறது.தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் போன்றவை நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அரங்கு, மருத்துவ முகாம், உணவு அரங்குகள் போன்றவை இடம் பெற்றுள்ளது.