நாகாவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தர்மபுரி: தர்மபுரி அருகே நாகாவதி அணை 10 ஆண்டிற்கு பின்பு நிரம்பியதைத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே எர்ரப்பட்டி கிராமத்தில் நாகாவதி அணை உள்ளது. 1987ம் ஆண்டு ₹3.13 கோடி மதிப்பில், இந்த அணை கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நாகாவதி மற்றும் ஏலகிரி பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளிலிருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 24.60 அடி. அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம், அரக்காசன அள்ளியில் 417.77 ஹெக்டேர், சின்னம்பள்ளி பகுதியில் 722.61 ஹெக்டேர், பெரும்பாலை பகுதியில் 852.62 ஹெக்டேர் பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த, 8 ஆண்டுகளாக, போதிய பருவமழை பெய்யவில்லை.  இதனால், அணைக்கு தண்ணீர் வரத்து இன்றி காணப்பட்டது. அணையிலிருந்து பல ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால், விவசாயம் பொய்க்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சீராக பருவமழை பெய்துள்ளது. இதையடுத்து, நாகாவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், 2013ம் ஆண்டிற்கு பின்பு ஏரி நிரம்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை ஏற்று நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தண்ணீரை திறந்து வைத்தார். நடப்பாண்டின் 2ம் போக புன்செய் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து வரும் ஜூன் 8ம் தேதி வரை மொத்தம் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறிகையில், நாகாவதி அணை கடந்த 10 ஆண்டிற்கு பின்பு நிரம்பியுள்ளது. அணையில் இருந்து நேற்று முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், மொத்தம் 7 நனைப்புகளுக்கு 120.40 மில்லியன் கன அடி தண்ணீர் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் 1993 ஏக்கர் நிலங்கள் பயனடைகிறது. எனவே, விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பாபு, பென்னாகரம் உதவிப்பொறியாளர் சந்தோஷ்குமார், முன்னாள் திமுக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, பென்னாகரம் தாசில்தார் சவுகத்அலி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: அணையின் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும். கடந்த 2013ம் ஆண்டு அணை நிரம்பியது.அதன்பிறகு இப்போது அணை நிரம்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சாமந்தி, மஞ்சள், நெல், கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல், கரும்பு, சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனர்.

Related Stories: