×

திருப்புவனத்தில் 125 கிலோ பாலீத்தின் சீட், பைகள் பறிமுதல் ரூ 8 ஆயிரம் அபராதம் வசூல்

திருப்புவனம்: தினகரன் செய்தி எதிரொலியாக திருப்புவனத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஓட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பாலித்தீன் பைகள் மற்றும் சீட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பாலித்தீன் பயன்படுத்திய ஓட்டல்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதமாக வசூல் செய்துள்ளனர். திருப்புவனத்தில் பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அவற்றை அழிக்க முடியாமல் தூய்மை பணியாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருப்புவனத்தில் தினசரி காய்கறி மார்கெட் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வாரச்சந்தை மற்றும் வேன், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், கப்புகள் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்கள், கடைகளிலும் பாலித்தீன் கவர்கள், சீட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இது குறித்து கடந்த 26ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று திருப்புவனம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாண்டி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து 125 கிலோ பாலித்தீன் பைகள், சீட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட சாயப்பவுடர் கலந்த 5 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்களை பயன்படுத்திய ஓட்டல்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.8 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

Tags : Tirupuvana ,
× RELATED திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்...