(திருத்தப்பட்ட செய்திஎண்01) ₹70 லட்சம் பதுக்கியது எங்கே? 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் வங்கி கொள்ளை திட்டமும் அம்பலம் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்

திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடித்த ₹70 லட்சம் பதுக்கியது எங்கே? என்பது குறித்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ₹72.79 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது. திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இரண்டரை மணிநேரத்துக்குள் கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.

இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(35), ஆசாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில்(கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்ைள கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கொள்ளை கும்பலின் தலைவனான முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் கடந்த 22ம் தேதி விசாரணைக்காக கோர்ட் அனுமதி பெற்று 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். அதன்படி கோர்ட் அனுமதித்த 7 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவரையும் ஆஜர்படுத்த உள்ளனர். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கொள்ளையடித்த ₹70 லட்சம் ஹரியானா மாநிலத்தில் பதுக்கியது தெரியவந்துள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர். அது சாத்தியமில்லை என தெரிந்த பிறகே ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

Related Stories: