×

ஊரை விட்டு 7 குடும்பத்தினரை ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு காட்பாடி அருகே கிராமத்தில்

வேலூர், பிப்.28: காட்பாடி அருகே தேன்பள்ளி கிராமத்தில் ஊரைவிட்டு 7 குடும்பத்தினரை ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் முன்னாள் ராணுவத்தினர் ஊர்வலமாக வந்த அளித்த மனுவில், ‘தமிழகத்தில் அதிக முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட வேலூர் மாவட்டத்தில், காவல்துறையினரால் முப்படை ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்தனர்.

குடியாத்தம் அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி, அகரம்சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய 5 ஊராட்சிகள் தற்போது நிர்வாக அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனைவருக்கும் பெரும் சிரமம் ஏற்படும். எனவே மேற்கண்ட கிராமங்களை திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்க கூடாது’ என தெரிவித்திருந்தனர். காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த சுகுணா என்பவர் அளித்த மனுவில், ‘எனது கணவர் ராஜமூர்த்தி, ஆவின் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆவின் பால் நடத்தும் ராமச்சந்திரன் உள்ளிட்ட 13 பேர் எனது நிலப்பத்திரம், வீட்டுபத்திரம் மற்றும் வங்கி கணக்கில் இருந்த ₹80 லட்சத்தை எடுத்துக்கொண்டனர். அதனை மீட்டுத்தர வேண்டும்’ என தெரிவித்தார்.

குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாமக நகர செயலாளர் குமார் அளித்த மனுவில், ‘குடியாத்தம் கோபாலபுரம் நேதாஜி சவுக்கில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்தோம். இதுவரை மாற்றவில்லை. எனவே உடனே அந்த கடையை மாற்றவேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் அவர் அளித்த மற்றொரு மனுவில், ‘குடியாத்தம் பகுதியில் கைத்தறி நெசவாளர்கள், தனியார் மண்டியில் லுங்கி நெசவு செயது 8 லுங்கிக்கு ₹1500 பெற்று வருகின்றனர். இந்த கூலி குறைவாக இருப்பதால் அதனை ₹1,950 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

காட்பாடி அடுத்த தேன்பள்ளி அருந்ததி காலனியை சேர்ந்த 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘தேன்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் எங்கள் 7 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக 7 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளோம். தற்போது தெருவில் நடந்து சென்றால் பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும் பேசுகிறார்கள். மேலும் கோயில் திருவிழாகளில் எங்களை அனுமதிக்கவில்லை. அப்படி சென்றாலும் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி உள்ளோம் என சொல்கின்றனர். ஊர் தலைவரிடம் கேட்டால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூரை சேர்ந்த பிச்சை முத்து என்பவர் அளித்த மனுவில், ‘எனது பெயரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பித்து, எனது பெயரில் பதிவெண் பதிவாகி உள்ளது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர், எனது பெயரில் வீடு கட்ட அனுமதி கிடைக்கவில்லை என கூறி வருகிறார். இதற்கிடையில், மூலைகேட் பகுதியில் உள்ள பிச்சைமுத்து என்பவருக்கு, எனக்கு வீடு கட்ட ஒதுக்கிய நிதியை மாற்றி வழங்குவதற்கு பேரம் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை திட்டம் சார்பில் 4 பேருக்கு தையல் இயந்திரம், மாவட்ட வழங்கல்துறை சார்பில் 9 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Tags : taub 7 village ,Gadbadi ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...