×

திருமூர்த்தி அணை பிஏபி கால்வாயில் 3ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

உடுமலை: திருமூர்த்தி அணை பிஏபி கால்வாயில் மூன்றாம் மண்டலம் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் பிஏபி பாசன திட்டம் உள்ளது. இரு மாநிலங்களிடையே நதிநீர் பங்கீடு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், பல ஆறுகளின் நீரை சேமிக்கும் வகையிலான பல அணைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தப்படும் பிஏபி திட்டத்தில் கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களும் பயனடைவது சிறப்பானதாகும். இத்திட்டத்தில் உடுமலை திருமூர்த்தி அணையின் மூலம்  திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகிறது.

மேலும் உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்றாம் மண்டலத்தில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் கடந்த டிசம்பர் 28 ம் தேதி முதல் 120 நாட்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், நான்கு சுற்றுகளாக 7 ஆயிரத்து 600 மில்லியன் கன அடி தண்ணீர்  திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து கடந்த டிசம்பர் 28ம்தேதி முதல் மூன்றாம் மண்டல பாசனத்தில், முதல் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 22ம் தேதி நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் சுற்றுக்கு ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதால் மூன்றாம் சுற்றுக்கு தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுக்கு வரும் மார்ச் 12ம் தேதி வரை தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், தற்போது 43.99 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து பாலாற்றின் மூலம் வினாடிக்கு 11 கன அடியும், காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 815 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 826 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் வெளியேற்றம் பிரதான கால்வாயில் 935, உடுமலை கால்வாயில் 156 கன அடி, தளி கால்வாயில் 17 கன அடி, குடிநீர் தேவைக்காக 21 கன அடி, நீரிழப்பு 9 கன அடி என மொத்தம் வினாடிக்கு 1,138 கன அடியாக உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து பாசன நீராதாரங்களில் நீர் இருப்பு குறைய தொடங்கியுள்ள நிலையில் மூன்றாம் மண்டலம் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Thirumurthy Dam ,
× RELATED திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு