×

திருத்தங்கல் மண்டலத்தில் சேதமடைந்த சாலைகள் மீண்டும் ஜொலிக்குமா?: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

சிவகாசி, பிப் 28: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன. சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி கூலித்தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட குறுகிய சாலைகள் உள்ளன.

இதில் சுமார் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் பள்ளி, மாணவ மாணவிகள் பெரும் சிரமம் அடைகின்றனர. கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தவே முடியாத நிலையில் தான் உள்ளது. அவசரத்திற்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலையில் உள்ளே வந்து செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன. இதில் பெரும்பாலான சாலைகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மீண்டும் போடப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளது . சாலைகள் சேதம் அடைந்து இருப்பதால் திருத்தங்கல் மண்டல பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக 100 சதவிகிதம் அனைத்து சாலைகளையும் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருத்தங்கல் பகுதி கணேசன் கூறும்போது, ‘‘திருத்தங்கல் பகுதியில் எங்கு திரும்பினாலும் சாலையில் மிகவும் மோசமாக உள்ளன. டூவீலரில் கூட செல்ல முடியாத அளவிற்கு ஏராளமான சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. அதுவும் குறிப்பாக வாறுகால் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளதால் அந்த பகுதியில் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு சாலையில் மோசமாக உள்ளன. அவசரத்திற்கு வரும் ஆட்டோக்கள் கூட வருவதற்கு தயங்குகின்றனர். ஆட்டோ, டூவீலர் அடிக்கடி பழுதாகுவதால் இந்த பகுதிக்களுக்கு வருவதை ஆட்டோ டிரைவர்கள் முடிந்த அளவிற்கு தவிக்கின்றனர். குறிப்பாக 5 வது வார்டு ரேஷன் கடைத்தெரு பகுதியில் சாலை பழுது காரணமாக அந்தப் பகுதியில் வாகனங்களில் இருந்து ரேசன் பொருட்கள இறக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது.

மெயின் ரோட்டில் இருந்து ரேஷன் பொருட்கள் இறக்கப்படுவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் வருகாலுடன் பேவர் பிளாக் கல் அமைத்து கொடுக்க வேண்டும்’’ என்றார். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருத்தங்கல் மண்டலத்தில் தற்போது வரை சுமார் 50 சதவிகிதம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து சாலைகளுக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணியில் தொடங்கப்பட உள்ளது என்று கூறினார்.

Tags : Thiruthangal Mandal ,
× RELATED திருத்தங்கல் மண்டலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு