தேனி, பிப். 28: தேனி புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.தேனி நகர் புதிய பஸ் நிலையத்திற்குள்ளும், பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள கடைகளுக்கு முன்பாகவும் போக்குவரத்துக்கு இடையூறாக அதிக அளவில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற வாகனங்களை உரிய நிறுத்துமிடங்களில் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் ஏராளமானோர் வாகனங்களை பஸ் நிலையத்திற்குள் நிறுத்திச்செல்கின்றனர்.
இதனால் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. அத்துடன் பயணிகளும் இதுபோல் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள கடைகளின் முன்பாகவும் அதிக எண்ணிக்கையில் சாலையின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவது தொடர்கிறது. அத்துடன் பேருந்து நிலையத்திற்குள் வர வேண்டிய நேரத்திற்கு முன்பாக தனியார் பஸ்களை கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு பிற பேருந்துகள் புறப்பட்டு செல்வதில் இடையூறு ஏற்படுத்துவதை சிலர் தொடர்ந்தனர். இதையடுத்து இதுபோல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் குறித்து தேனி போக்குவரத்து போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது தேனி புதிய பஸ் நிலையத்திற்குள் வருகை நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டிருந்த 3 தனியார் பேருந்துகள், 3 கார்கள், 5 ஆட்டோக்கள் மற்றும் பஸ் நிலையத்திற்குள்ளும், பஸ் நிலையத்திற்கு வெளியே கடைகளின் முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 89 மோட்டார் சைக்கிள்கள் என 100 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.