மதுரை அரசு மருத்துவமனை ஸ்கேன் அறையில் கர்ப்பிணியிடம் நூதனமாக நகை திருடிய பெண்

மதுரை, பிப்.28: மதுரை அரசு மருத்துவமனையில், ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணியிடம் நூதன முறையில், மாங்கல்யத்துடன் கூடிய, தாலிக்கயிறை அபகரித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஐராவதநல்லூர், ராஜா நகரைச் சேர்ந்தவர் காயத்ரி(21). கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார். பிரசவ வார்டில் ஸ்கேன் பரிசோதனைக்காக அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு பெண், ஸ்கேன் எடுப்பதற்காக காயத்ரியை ஸ்கேன் அறை இருந்து பகுதிக்கு கூட்டிச்சென்றார். அங்கு சென்றவுடன், அந்தப்பெண், காயத்ரியிடம், ``தங்கத்திலான தாலியை அணிந்துகொண்டு ஸ்கேன் அறைக்குள் செல்லக்கூடாது’’ எனக்கூறினார்.

பின்னர், தான் தயாராக வைத்திருந்த மஞசள் கட்டிய கயிறை கொடுத்து, இதை அணிந்துகொண்டு, தாலி கட்டிய கயிறை தன்னிடம் தருமாறும், வெளியே வந்தவுடன் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதை நம்பிய காயத்ரி, 7 கிராம் எடையுள்ள தாலி உள்ள கயிறை கழட்டி, அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்கேன் எடுத்து முடிந்து வெளியே வந்து பார்த்த போது, அந்தப் பெண்ணை காணவில்லை. இது குறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: