குரூப் 4 தேர்வு முடிவுகளை குளறுபடிகளின்றி வெளியிட வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை

பழநி, பிப். 28: குரூப் 4 தேர்வு முடிவுகளை குளறுபடிகளின்றி வெளியிட வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2022ல் மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 7 ஆயிரத்து 301 குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடந்தது. சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். 7 மாதங்களாக தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர். இதன் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாமென தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த பிப்.25ம் தேதி குரூப் 2 மெயின் தேர்வு நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால் குரூப் 4 தேர்வர்கள் அச்சத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். தேர்வுகளிலேயே குளறுபடிகள் இவ்வளவு நடந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளில் என்ன மாதிரியான குளறுபடிகள் நடந்திருக்குமோ என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, குரூப் 4 தேர்வு முடிவுகளை அவசரம் இல்லாமல், காலதாமதம் ஆனாலும் குளறுபடிகளின்றி வெளியிட வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அவ்வப்போது குளறுபடிகள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். தேர்வாணையம் 1 தலைவர், 14 உறுப்பினர்கள் என 15 பேர் கொண்ட அரசியலமைப்பால் உருவான தன்னாட்சி அமைப்பு. போதிய உறுப்பினர்கள் இல்லாததால் உறுதியான முடிவுகள் எடுப்பதில் கூட தொய்வு ஏற்படும் நிலை உண்டாகி உள்ளது. எனவே, தேவையான உறுப்பினர்களை நியமித்து குரூப் 4 முடிவுகளை குழப்பமின்றி, தெளிவாக வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: