பெரியார் பல்கலை.,யில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கள ஆய்வு

ஓமலூர், பிப்.28: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கள ஆய்வு நிகழ்ச்சி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வட்டார அரசு பள்ளிகளில் படிக்கும் 220 மாணவ, மாணவிகள், 20 ஆசிரியர்கள், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தனர். குறிப்பாக பாகல்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுக்காரனூர், ஜாகீர் அம்மாபாளையம், சர்க்கார் கொல்லப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். இவர்களை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், நூலகர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துறைகள், ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும், பேராசிரியர்கள் தங்கள் அனுபவங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் மாணவர்களை அழைத்து வந்து சுற்றி காண்பித்தனர். பின்னர் அரசு பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடினர். பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் கற்று கொண்டதையும், மாணவர்களுடைய அனுபவங்களையும், மாணவர்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

Related Stories: