நாமக்கல் கலெக்டர் ஆபிசில் குறைதீர் கூட்டத்தில் 255 மனுக்கள் குவிந்தது

நாமக்கல் பிப்.28: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், 255 மனுக்கள் குவிந்தன. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 225 மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் குறுவட்டம், கொன்னையார் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ மணிமேகலை, அரசுத்துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: