பாரூரில் 3 நாட்கள் நடக்கிறது; மீன் வளர்ப்பு முறைகள் குறித்த இலவச பயிற்சி:பதிவு செய்து கொள்ள அழைப்பு

கிருஷ்ணகிரி, பிப்.28: பாரூரில் நாளை (1ம் தேதி) முதல் 3 நாட்கள், நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த இலவச பயிற்சி நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய உதவி பேராசிரியர் சோமு.சுந்தரலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2021-22ம் ஆண்டு நிதி உதவியின் கீழ், பாரூரில் அமைந்துள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்து நாளை (மார்ச் 1ம் தேதி) முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் குளம் அமைத்தல், பராமரிப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. மேலும், பயிற்சியாளர்கள் தற்போது வெற்றிகரமாக மீன் வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். எனவே, விருப்பமுள்ள பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு உதவி பேராசிரியர் சோமு.சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: