×

மேட்டுப்பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை நகர் மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

மேட்டுப்பாளையம்,பிப்.28:  மேட்டுப்பாளையம் நகராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி மற்றும் 22 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குறிப்பாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும்,இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடனேயே சாலையில் பயணிக்க கூடிய நிலை உள்ளதாகவும் பெரும்பாலான கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், சத்தியமூர்த்தி நகரிலுள்ள கோவிந்தம் பிள்ளை மயானத்தில் பணியில் இருந்து வரும் காவலாளியை ஒப்பந்த முறையில் பணியில் நியமிக்கவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. முக்கியமான தீர்மானமாக சத்தியமூர்த்தி நகரில் உள்ள இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நந்தவனத்திற்கு தினந்தோறும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.இந்த இடத்தில் கூடுதலாக கழிப்பிடம் கட்டித் தருமாறு நந்தவன பொறுப்பாளர்கள் கடிதம் வாயிலாக நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து நேற்று நடைபெற்ற நகர்மன்றக்கூட்டத்தில் கூடுதல் கழிப்பிடம் கட்ட ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர் மன்ற கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம்,சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் நகர்மன்ற தலைவரிடம் வெறிநாய்கள் தொல்லை குறித்து கவுன்சிலர் சுனில்குமார் மனு அளித்தார். நாய்கள் தொல்லை குறித்து நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் கூறுகையில் விரைவில் நகராட்சி எல்லைக்குட்பட்ட 33 வார்டுகளிலும் நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Mettupalayam ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது