×

மார்ச் 5ம் தேதி நீலகிரி புத்தக திருவிழா

ஊட்டி, பிப். 27: நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா வரும் மார்ச் 5ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாசிப்பாளர்கள், பொதுமக்கள் அதிகவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும் சீரிய நோக்கத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா வரும் மார்ச் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அனைவருக்கும் இலவச அனுமதியுடன் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

 முதலாவது நீலகிரி புத்தக திருவிழாவின் சின்னமாக நீலகிரி வரையாடு வெளியிடப்பட்டு உள்ளது. நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பு இனங்களில் ஒன்றாக உள்ளது. நீலகிரி வரையாடு தமிழ்நாடு அரசின் மாநில விலங்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முதலாவது நீலகிரி புத்தக திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பல்வேறு துறை சார்ந்த படைப்பாளிகள் மற்றும் ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் மற்றும் உணவரங்கம் ஆகிய சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.

நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஒருங்கிணைந்து முதலாவது நீலகிரி புத்தக திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. எனவே புத்தகத்தை வாசிக்கவும், நேசிக்கவும், கல்வி ஞானமும், கேள்வி ஞானமும், கலை ஞானமும் பெற்று பயனடைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், வாசிப்பாளர்கள், படைப்பாளிகள், பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முதலாவது புத்தக திருவிழாவில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Tags : Nilgiri Book Festival ,
× RELATED நீலகிரி புத்தக திருவிழா மாணவர்கள் கூட்டம் அலைமோதியது