வேலூர்: வேலூரில் ₹2.75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்முனை கால்நடை மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் வேலூர் இணை இயக்குனரக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலைமையிட கால்நடை மருத்துவமனைகள் காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், அரக்கோணம் என 8க்கும் மேற்பட்ட இடங்களிலும், மூன்று மாவட்டங்களில் சேர்த்து 163 கால்நடை மருந்தகங்களும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், வேலூர்-பெங்களூரு சாலையில் கால்நடை இணை இயக்குனர் வளாகத்தில் கால்நடை மருத்துவமனை, ஆய்வகம், மருந்து கிடங்கு என பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இடப்பற்றாக்குறை, சிகிச்சைக்காக வரும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதி இல்லாததை கருத்தில் கொண்டு புதிய கால்நடை மருத்துவமனை வளாகத்தை கட்ட கால்நடை பராமரிப்புத்துறை திட்டமிட்டது.
ஆனால், மத்திய தொல்லியல் துறை சட்டத்தின் கீழ் தொன்மையான சின்னங்களை மறைக்கும் வகையில் அதை சுற்றி 500 மீட்டர் தொலைவுக்குள் உயரமான கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது என்ற விதிமுறையால் தொல்லியல்துறை அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான இடம் வேலூர் தொரப்பாடி பெண்கள் தனிச்சிறைக்கும், வேளாண் இணை இயக்குனரக வளாகத்துக்கும் இடையில் 30 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அந்த இடத்தில் ₹2.75 கோடி மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டும் பணி தொடங்கியுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டப்படும் இம்மருத்துவமனையில் உதவி இயக்குனர் தலைமையில் 4 மருத்துவ அலுவலர்கள், மருந்தாளுனர்கள், கால்நடை பராமரிப்பு அலுவலர்கள், உதவியாளர்கள் என அனைத்து பணியாளர்களுடன் அமைகிறது.அத்துடன் இவ்வளாகத்தில் மருந்து கிடங்கு, அறுவை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, தினமும் 10 கால்நடைகளை உள்நோயாளிகளாக அனுமதியளித்து சிகிச்சை அளிக்கும் வசதி, ஆய்வகம், பார்மஸி, இசிஜி, ஸ்கேன் வசதி, பிரசவ வசதி, 1962 அவசர தொடர் எண்ணுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கால்நடை மருத்துவமனை வளாகம் அமைகிறது என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். படவிளக்கம்தொரப்பாடியில் வேலூர் மாவட்ட தலைமையிட கால்நடை மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளது.