×

நெல்லை டவுன் வயல்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம் பயிர் சேதத்தால் விவசாயிகள் கவலை

நெல்லை: நெல்லை டவுன் மற்றும் குன்னத்தூர் வயல்வெளிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் காரணமாக விவசாயிகள் கவலைக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் மட்டுமே பல வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை நாசமாக்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் காட்டுபன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. களக்காடு சுற்றுவட்டார வயல்களிலும், மானூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் காட்டு பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து நாசப்படுத்தி வருகின்றன. நெற்பயிர்கள் மட்டுமின்றி, கிழங்கு வகைகள் மற்றும் உளுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்துவதோடு, அவற்றை வனத்துறையின் பட்டியல் இனத்தில் இருந்து அகற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து குறைதீர்ப்பு கூட்டங்களில் குறைகொடுத்து வருகின்றனர்.

மேலும் மானூர் விளைநிலங்களில் காட்டுபன்றிகளின் அட்டகாசம் குறித்து அடிக்கடி விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்து செல்கின்றனர். இந்நிலையில் டவுன், குன்னத்தூர் பகுதி வயல்களிலும் காட்டு பன்றிகளின் அட்டகாசம் தற்போது அதிகரித்து வருகிறது. டவுனை அடுத்த மேலகுன்னத்தூர் பகுதியில் சுமார் 300 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. பொதி சுமந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் அங்கு காணப்பட்டன. நேற்று முன்தினம் இரவில் குன்னத்தூர் மலையில் இருந்து இறங்கிய காட்டு பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டவுன் குன்னத்தூர் விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதி வயல்களில் பகல் நேரங்களில் பாதுகாப்பு இருந்தாலும், இரவு நேரங்களில் யாரும் வயல்வெளிக்கு வருவதில்லை. இதை பயன்படுத்தி கொண்டு காட்டு பன்றிகள் மலையில் இருந்து இறங்கி வயல்வெளிக்குள் வருகின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை ஏக்கர் கணக்கில் நாசம் செய்துவிட்டன. எனவே விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் புகுவதை தடுக்கவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.




Tags : Paddy Town ,
× RELATED இளம்பெண்ணை குத்தி கொன்ற 17 வயது சிறுவன்...