×

ஓசூர் சந்தையில் பூக்கள் விலை சரிவு

ஓசூர்: ஓசூர் சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை சரிந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இதனால், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓசூர் பகுதியில் மட்டும் சுமார் 2500 ஏக்கரில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரம் ஏக்கரில் செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுபநிகழ்ச்சிகள் இல்லாததால் விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஸ் நேற்று ₹40 வரையிலும் சரிந்தது. சாமந்தி ₹60க்கும், அரளி ₹60க்கும், செண்டுமல்லி ₹20க்கும் விற்பனையானது. பூக்களின் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஓசூரில் தினந்தோறும் 100 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு 150 டன் வரை அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, விசேஷ நாட்கள் இல்லாததால், பூக்களின் விலை குறைந்துள்ளது. விசேஷ நாட்கள் வந்தால் தான் பூக்கள் விலை கூடும்,’ என்றனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு