×

(சைடுபேனர்)நகை, அடகு கடைகளில் சேப்டி லாக்கர் அவசியம் வேலூர் வியாபாரிகளுக்கு எஸ்பி அறிவுரை குற்றச்சம்பவங்களை தடுப்பதில் கூட்டு பொறுப்பு

வேலூர், பிப்.26: வேலூர் நகை, அடகு கடைகளில் மட்டுமின்றி, வியாபாரிகள் தங்கள் வீடுகளிலும் சேப்டி லாக்கரை அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நகை, அடகு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்பி ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தினார். வேலூர்- காட்பாடி சாலையில் உள்ள பிரபலமான நகைக்கடையில் கடந்த ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக சில நாட்களிலேயே குற்றவாளி பிடிக்கப்பட்டு அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று தமிழகம் முழுவதும் நடை, அடகு கடைகளில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை போகும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து நகை, அடகு வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு அம்சம் தொடர்பான அறிவுரைகள் அவ்வபோது காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வேலூர் அகத்தி கிருஷ்ணப்ப செட்டி வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் நகை, அடகு வியாபாரிகளை அழைத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட நகை, அடகு வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேஷ்குமார், பொருளாளர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்பி ராஜேஷ் கண்ணன், ‘நகை, அடகு கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளை மொத்தமாக பாதுகாக்க சேப்டி லாக்கர்களை பயன்படுத்த வேண்டும். அதோடு வீடுகளிலும் சேப்டி லாக்கர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும் அனைத்து கடைகளிலும் எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும்.

கடைகளில் மட்டுமின்றி சாலைகளை முழுவதுமாக கண்காணிக்கும் வகையில் கேமராக்களை பொருத்த வேண்டும். கேமராக்கள் குற்றவாளிகளுக்கு தெரியாத வகையில், அணுக முடியாத இடத்தில் அமைக்க வேண்டும். சிறிய கடைகள் இணைந்து தங்களுக்குள் 4 அல்லது 5 செக்யூரிட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய கடைகள் தனியாக செக்யூரிட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும். குற்றங்களை தடுப்பதில் நகை, அடகு வியாபாரிகளுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளதை அறிந்து காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வேலூரை சேர்ந்த 200 நகை, அடகு வியாபாரிகள் கலந்து கொண்டனர். நகை, அடகு வியாபாரிகள் சங்க பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : SideBanner ,Septi ,Locker ,Vellore ,
× RELATED லாக்கர்: விமர்சனம்