×

(தி.மலை) வேலை கேட்டு 100 நாள் தொழிலாளர்கள் சாலை மறியல் சேத்துப்பட்டு ஆத்துரை கிராமத்தில்

சேத்துப்பட்டு, பிப். 26: சேத்துப்பட்டு ஆத்துரை கிராமத்தில் வேலை கேட்டு 100 நாள் தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பஞ்சாயத்து யூனியன் ஆத்துரை கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 4 வாரங்களாக பஞ்சாயத்து நிர்வாகம் 100 நாள் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் தொழிலாளர்கள் நேற்று காலை ஆத்துரை கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சேத்துப்பட்டு போலீசார் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இரண்டு நாளில் முடிந்து விடும். ஆகவே நாளை முதல் 100 நாள் வேலை திட்ட கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட 100 நாள் தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தேவிகாபுரம் - மன்சூராபாத் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Tags : Th. Malai ,Athurai ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்