×

வேடசந்தூருக்கு வந்து செல்லும் நெடுந்தூர பேருந்துகள் பஸ் நிலையம் வர வேண்டும்: பயணிகள் கோரிக்கை

வேடசந்தூர், பிப். 26: வேடசந்தூர் பஸ் நிலையத்திற்கு நெடுந்தூரம் செல்லும் பேருந்துகள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேடசந்தூர் நகருக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த நான்கு வழிச்சாலை அமைவதற்கு முன்பு அது தேசிய நெடுஞ்சாலையான என்.எச் 7 ஆக இருந்து வந்தது.

அப்போது அனைத்து வெளியூர் பேருந்துகளும் வேடசந்தூர் நகர் பகுதிக்குள் வந்து செல்லும் நிலை இருந்து வந்தது. தற்போது இந்த பேருந்துகள் அனைத்தும் நான்கு வழிச்சாலை வழியாகவும், ஆத்து மேடு பகுதி வழியாகவும் சென்று வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வேடசந்தூர் பஸ் நிலையம் வராதநிலை தொடர்கிறது. இதன் காரணமாக, வேடசந்தூர் பகுதிக்கு வந்து செல்லும் வெளியூர் பயணிகள் மட்டுமின்றி வேடசந்தூரிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆத்துமேடு பகுதியில் நின்று, அதன் பிறகு கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ஓசூர், பெங்களூரு, நாமக்கல், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளில் ஏறிச்செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதே போன்று திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், சபரிமலை செல்லும் பயணிகள் முதல் திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் ஆத்துமேடு பகுதிக்கு சென்று பேருந்துகளை பிடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதேபோல், இரவு நேரங்களில் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் வேடசந்தூர் நகர் பகுதிக்குள் வராமல் புறவழிச் சாலையான நான்கு வழிச்சாலையில் சென்று விடுகிறது. மேலும் கரூர், சேலம், ஈரோடு, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகரப்பகுதி பஸ் நிலையத்திற்குள் வராமல் புறவழிச் சாலை வழியாகவே சென்று விடுகிறது. இதேபோன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கம்பம், மதுரை, திண்டுக்கல்லில் இருந்து வரும் பேருந்துகளும் வேடசந்தூருக்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வருவதில்லை.அப்படியே பயணிகளை ஏற்றி வந்தாலும் அந்த பேருந்துகள் வேடசந்தூர் பஸ் நிலையம் வராமல் புறவழிச்சாலை வழியாகவே சென்று விடுகின்றன.

வேடசந்தூர் பகுதியில் வெளியூர் செல்லுதல், வியாபாரம் மற்றும் அரசு பணிகளுக்கு சென்று வரக்கூடியவர்கள் என்று பயணிகள் அதிக அளவில் இருக்கின்றனர். எனவே அரசு பேருந்துகள் ஆத்துமேடு வழியாக செல்லாமல் பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் அடிக்கடி புகார் தெரிவிக்கப்படுகிறது. அதுபோன்ற நேரத்தில் சிலநாட்கள் மட்டும் பேருந்துகள் வேடசந்தூர் நகர் பகுதிக்குள் வந்து செல்கின்றன.

பின் மீண்டும் பழைய கதையாக ஆத்துமேடு வழியாகவும், புறவழிச்சாலை வழியாகவும் பேருந்துகள் சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், அலுவலர்கள் உளளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு அரசு பேருந்துகள் அனைத்தும் வேடசந்தூர் பஸ் நிலையம் வந்து செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vedsandur ,
× RELATED வேடசந்தூர் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்