×

நிலக்கோட்டை பகுதியின் வைகை பாசனமடை தேர்தலை முறையாக நடத்த வேண்டும்: தாசில்தாரிடம் விவசாயிகள் மனு

நிலக்கோட்டை, பிப். 26: நிலக்கோட்டையை அடுத்த வைகை பாசனமடை சங்க தேர்தலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நிலக்கோட்டையை அடுத்த முல்லைப்பெரியார் வைகை பாசனப் பகுதிகளான அணைப்பட்டி, சொக்குபிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 உறுப்பினர்களைக் கொண்ட வைகை பாசனப்பகுதி, முல்லைபெரியார் பாசனக்கால்வாய் மடை சங்க தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது இதற்கு முந்தைய உறுப்பினர்களின் பதவி காலம் முடிந்து விட்டதால், தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் (பிப்.24) தொடங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்பு மனு பரிசீலனை மார்ச் 3ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான, வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பு மனுக்களை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாத விவசாயிகள் போட்டியிட வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனை தடுக்கும் வகையில் தேர்தலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையான கண்காணிப்புடன் நடத்திட வலியுறுத்தியும் வைகை பாசன மடை சங்க வாக்காளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நல்லதம்பி என்பவரது தலைமையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் தனுஷ்கோடியிடம் முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது தேர்தல் நேர்மையாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தாசில்தார் உறுதியளித்தார்.

Tags : Vaigai ,Nalakotta ,Dasildar ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு