ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் பங்கேற்பு

திருப்பூர், பிப்.26: பின்னலாடை நகரான திருப்பூரில் தமிழகம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அருகில் உள்ள மாவட்டங்களான கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாக திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.

பனியன் நிறுவனங்கள், குடோன்கள், விற்பனை அங்காடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த 10 நாட்களாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக தொழிலாளர்கள் சிலர் சென்றனர். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு மற்றும் திருப்பூர், கோவை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சென்றனர்.

இதனால் நேற்று திருப்பூரில் உள்ள சில பனியன் நிறுவனங்கள் தொழிலாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் உள்நாட்டு பனியன் உற்பத்தியில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக திருப்பூரில் வேலை மிக குறைவாக உள்ளது. ஒரு சில நாட்களில் மட்டுமே வேலை செய்கிறோம். சில நாட்களில் திருப்பூர் வந்து மீண்டும் வேலை இல்லாமல் திரும்பி செல்கிறோம். வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்பு பல தொழிலாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்றனர்.

Related Stories: