அப்போலோ மருத்துவமனையில் உறைந்த தோள்பட்டை பாதிப்புக்கு கதிரியக்க சிகிச்சை முறை அறிமுகம்: இதுவரை 25 நோயாளிகளுக்கு தீர்வு

சென்னை: இறுக்கமான அல்லது உறைந்த தோள்பட்டை  எனப்படும் ப்ரோஸென் ஷோல்டர் பாதிப்பு உள்ளவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு இறுக்கமான அல்லது உறைந்த தோள்பட்டை எனப்படும் ப்ரோஸென் ஷோல்டர் பாதிப்பு ஏற்படும். இவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகள் அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. இறுக்கமான தோள்பட்டை பாதிப்பினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அப்போலோ மருத்துவமனை, ஹைட்ரோடைலேட்டேஷன் எனப்படும் அறுவைசிகிச்சை அல்லாத கதிரியக்க சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை, 25 நோயாளிகள் இந்த சிகிச்சை முறைக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு தோள்பட்டை மதிப்பெண் 12ல் இருந்து 42 ஆக உயர்ந்துள்ளது. ஆக்ஸ்போர்டு ஷோல்டர் ஸ்கோர் என்பது தோள்பட்டை நோயால் ஏற்படும் வலி மற்றும் இயலாமையின் அளவை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறை.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி கூறியதாவது: நோயாளிகளுக்கு  இறுக்கமான தோள்பட்டை பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும்  வகையில் அறுவை சிகிச்சை அல்லாத கதிரியக்க சிகிச்சை முறையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். நோயாளிகள் மன மற்றும் உடல் வலிகள் இல்லாத நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த முயற்சி அதற்கான அடுத்தகட்டமாகும். தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு முறைகளை இணைத்து, சிகிச்சைக்கான விரிவான அணுகுமுறைகளை மேற்கொள்ளும் எங்கள் சுகாதார நடைமுறைகள் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனையின் எலும்பியல், தோள்பட்டை மற்றும் முழங்கை அறுவை சிகிச்சை நிபுணர் சிவராமன் கூறியதாவது: இறுக்கமான தோள்பட்டை சிக்கலை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை  குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை இல்லாத மற்றும் செலவு குறைந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை நடைமுறையின் போது, அல்ட்ராசவுண்ட் எனப்படும் புறவொலி அல்லது மீயொலி வழிகாட்டுதலின் கீழ் தோளில் உள்ள காப்ஸ்யூலில் 100 முதல் 150 மில்லி சாதாரண கரைசல் செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறை அனஸ்தீஸியா கொடுக்கப்பட்ட பகுதியில் செய்யப்படுகிறது. 360 டிகிரியிலும் காப்ஸ்யூலை விரிவாக்க உதவுகிறது.

இதன் மூலம் மேம்பட்ட தோள்பட்டை செயல்பாடு மற்றும் கைகளை முன், பின், மேல் பகுதிகளில் இயக்கத்தைப் பெற முடிகிறது. நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அறுவை சிகிச்சையை தவிர்க்க உதவியது என்பதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். பலவிதமான தோள்பட்டை பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை மையம் விரைவான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும்  தீர்வுகளை வழங்குகிறது. மருத்துவமனைக்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு சில முறை மட்டும் வந்தால் போதுமானது  மற்றும் நோயாளிகளின் மன திருப்தி இவை இரண்டும்  இந்த சிகிச்சையின் முக்கிய பலன்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: