×

(தி.மலை) காலை உணவு வழங்கும் திட்டத்தை அதிகாரிகள் நேரடி ஆய்வு * மாணவர்களுடன் அமர்ந்து உணவை ருசித்தனர் * சூடாகவும், சுவையாகவும் உணவு வழங்க உத்தரவு திருவண்ணாமலை நகராட்சிப் பள்ளியில்


திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலை நகராட்சிப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களுடன் அதிகாரிகளும் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.
தொடக்கப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும், காலை உணவை தவிர்த்துவிட்டு பள்ளிக்கு வருவதால், சத்துக்குறைபாடு ஏற்பட்டு மாணவர்கள் உடல் நலனும், கற்றல் திறனும் பாதிக்கிறது. எனவே, பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியிருக்கிறார்.

மேலும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காைல உணவு விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வழங்கப்படுகிறது. அதன்படி, திங்கள் கிழமை சேமியா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை ரவா காய்கறி கிச்சடி, புதன் கிழமை, வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி, ரவா கேசரி ஆகியவை வழங்கப்படுகிறது.
அதோடு, அந்தந்த பகுதிகளில் கிடைக்கக்கூடிய சிறுதானிய உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை உணவு சுடச்சுட வழங்க வேண்டும் என்பதற்காக, நகர பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த பள்ளிகளில் தனி சமையல் கூடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காலை உணவு சமைத்து வழங்கப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 17 பள்ளிகள் மற்றும் செய்யாறு நகராட்சியில் உள்ள 7 பள்ளிகள், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகள் உள்பட மொத்தம் 70 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. விரைவில், இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் காலை உணவு திட்டத்தை நேரில் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதையொட்டி, கடந்த வாரம் ஜவ்வாதுமலை பகுதியில் இரண்டு நாட்கள் முகாமிட்ட கலெக்டர் பா.முருகேஷ், அங்குள்ள பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை நகராட்சி ராமலிங்கனார் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நகராட்சி ஆணையர் முருகேசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 137 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுடன் இணைந்து, நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் காலை உணவை சாப்பிட்டனர்.

அப்போது, காலை உணவு மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் சுவையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நிறைவாக காைல உணவை உண்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார். மேலும், திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 14 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 879 மாணவ-மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவதாகவும், ஒவ்வொரு நாளும் நகராட்சி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று இப்பணியை ஆய்வு செய்வதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். ஆய்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்(பொறுப்பு) பிரம்மானந்தன், வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, உதவி திட்ட அலுவலர் விஜயன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் அமுதமொழிதேவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags : T.Malai ,Tiruvannamalai Municipal School ,
× RELATED (தி.மலை) எருது விடும் விழாவில்...