×

கோவை நாடார் சங்கம் சார்பில் கலைக்கல்லூரி துவக்க திட்டம்

கோவை:  கோவை நாடார் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாடாபாத்தில் உள்ள நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது. இத்தேர்தலில், டி.ஆர்.சி அணியினர், 1 முதல் 51 வரையுள்ள எண்களுக்கு வாக்கு அளிக்கக்கோரி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த அணி தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை நாடார் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இடையில், நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. தற்போது வழக்கு முடிவுபெற்று மீண்டும் தேர்தல் நடக்கிறது. 2023-2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில், எங்களது அணியினர் 1 முதல் 51 வரையுள்ள எண்களுக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகிறோம். வாக்குப்பதிவு முடிந்த அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படுகிறது. மறுநாள், தலைவர், பொதுச்செயலாளர் பொருளாளர், 3 துணை தலைவர்கள், 3 துணை செயலாளர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்.  கோவை நாடார் சங்கம், போதிய நிதி ஆதாரமின்றி செயல்பட்டு வந்தது. நாங்கள் கடந்த 2005ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தோம். அன்று முதல் இன்றுவரை தொடர்ச்சியாக  சங்கத்தின் நிதி ஆதாரத்தை பெருக்கி வருகிறோம். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம். இதில், ரூ.50 லட்சம் சங்க வளர்ச்சி மற்றும் சமுதாய மேம்பாட்டுக்கு செலவிடுகிறோம். மீதமுள்ள ரூ.50 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. மிக விரைவில் ரூ.10 கோடி நிதி திரட்டப்பட்டு, சங்கம் சார்பில் கோவை புறநகர் பகுதியில் 10 ஏக்கர் நிலம் வாங்க உள்ளோம். அதில், புதிதாக கலை அறிவியல் கல்லூரி துவக்க உள்ளோம்.


ஏற்கனவே, சங்கம் சார்பில் டாடாபாத்தில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி ஆண்டுதோறும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி  இப்பள்ளியில் 900 மாணவ, மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில், ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடார் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 3 பருவ கல்வி கட்டணத்தில், ஒரு பருவத்துக்கு கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது. இதுதவிர, பொதுத்தேர்வில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சமுதாய மக்கள் யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ நிதியுதவி கோரும் பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, மருத்துவ உதவித்தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. சங்கம் சார்பில், நர்சிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்ற தொழில்கல்வி நிறுவனங்களும் துவக்க உள்ளோம். சமுதாய மக்கள் ேமம்படும் வகையில் ஆண்டுதோறும் நவீன சுயம்வரம் நடத்தி வருகிறோம்.

இடையில், கொரோனா தாக்கம் காரணமாக 2 ஆண்டுகள் சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு முதல், மீண்டும் நவீன சுயம்வரம் நடத்தப்படும். சுயதொழில் புரிய விருப்பம் உள்ளவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவியும் ஏற்பாடு செய்து தருகிறோம்.  நாங்கள், இச்சங்கத்தில் 2005-ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தபோது, 1,980 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 22,200 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை வாக்களிக்க உள்ளனர். ஜனநாயக முறைப்படி இத்தேர்தல் நடக்கிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டுகிறோம். இவ்வாறு சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் கூறினார்.  பேட்டியின்போது, நிர்வாகிகள் ஜி.இருதயராஜா, ஆர்.எஸ்.கணேசன், ஏ.எஸ்.டேவிட், பொன்.செல்வராஜ், ஜெ.அருள், பாக்கியநாதன், ஆனந்தபாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Coimbatore Nadar Sangam ,
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்