×

திருவாரூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் கொண்டு ெசல்லப்படுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டூர் அணையானது வரலாற்றிலேயே இல்லாத வகையில் முன்கூட்டியே கடந்தாண்டு மே மாதம் 24ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து இவ்வாறு திறக்கப்பட்ட நீரானது அடுத்த ஒருசில நாட்களிலேயே கடைமடைவரை சென்றடைந்ததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் உடனடியாக துவங்கினர்.  அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலும் சாகுபடி பணிகள் துவங்கிய நிலையில் இதற்கான விதைகள் மற்றும் உரங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டதுடன் குறுவை தொகுப்பு திட்டமாக மாவட்டத்திற்கென ரூ 13 கோடியே 57 லட்சம் ஓதுக்கி 100 சதவிகித மானியத்தில் ரசாயன உரங்கள், கூட்டுறவு துறையின் மூலம் விவசாய கடன்களும் வழங்கப்பட்டதால் நடப்பாண்டில் சாகுபடி என்பது வழக்கமான பரப்பளவை விட கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கரில் என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் செப்டம்பர் 1ம் தேதியே கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் 4 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

அடுத்ததாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர். இதனையொட்டி மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு எனப்படும் செம்மை நெல் சாகுபடி மற்றும் சாதாரண நடவு முறை என சம்பா மற்றும் தாளடி பயிராக 3 லட்சத்து 72 ஆயிரத்து 994 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு தேவையான உரங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டதுடன் தேவையான ரசாயன உரங்கள் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் போன்றவையும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் உரிய காலத்தில் கிடைக்க செய்ததன் காரணமாக இந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் இவ்வாறு அறுவடை செய்யப்படும் வைக்கோல்களில் பெரும்பாலானவை வியாபாரிகள் மூலம் விலை கொடுத்து வாங்கப்பட்டு அதனை லாரிகளில் கொண்டு சென்று வெளி மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும், அவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவதால் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை காலங்களில் வைக்கோல் தட்டுபாடு ஏற்பட்டு கால்நடைகள் இறக்கும் சூழல் ஏற்படும் என்பதால் இதனை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து அதன் மாவட்ட தலைவர் தம்புசாமி கூறுகையில்,டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலம் இல்லாமல் மாடுகளை வளர்க்கும் பொது மக்கள் மழை காலங்களில் வைக்கோல் கிடைக்காமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவது மட்டுமின்றி கால்நடைகள் இறப்பும் ஏற்பட்டு வருகிறது.  எனவே வைக்கோல் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தம்புசாமி தெரிவித்துள்ளார்.



Tags : Tiruvarur ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...