திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சிறப்பாக செயல்படும் தூய்மை பணி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் நகரபகுதியில் தூய்மை பணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஆணையர் பிரதான் பாபு, சுகாதார ஆய்வாளர் அருண்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியாலும், சுகாதார மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பிலும் ஒவ்வொரு வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று மணியடித்தும், விசில் அடித்தும், மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து அதை குப்பை கிடங்குகளில் சேர்க்கின்றனர், பிறகு மக்கும் குப்பைகளை தனியே நுண் உரம் தயாரிப்பு மையங்களில் சேர்கின்றனர். மக்கா குப்பைகள் சிமென்ட் கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும் வணிக நிறுவனங்களிலும், காய்கறி மார்கெட், பழக்கடைகள் ஆகியவற்றிலும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இதுகுறித்து நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறுகையில் சுகாதாரத்தை காப்பது மூலமே மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் அதன்படி குப்பை மேலாண்மை என்பது சவாலான பணியாக உள்ளது, மக்களும், வணிகர்களும் சமுதாய அக்கரையோடு போதிய ஒத்துழைப்பு தர வேண்டும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதும், தெருக்களில் கொட்டாமல் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும், ஒவ்வொரு வாரமும் ஒரு வார்டில் மக்களிடம் நேரடியாக சென்று குப்பை கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது , பள்ளி மாணவர்களிடம் போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவும், பல இடங்களுக்கு நானே நேராக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்றார், ஆணையர் பிரதான் பாபு கூறுகையில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் பணியாளர்கள் துப்புரவு பணியை சரியாக செய்து வருகிறார்கள் மேலும் தூய்மை தூதுவர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது, எனவே நகராட்சி முழுவதும் திறந்தவெளியில் மலங்களித்தலற்ற நகராட்சியாக உள்ளது, பள்ளிகள், உணவகங்களில் தினம் தினம் சேரும் மக்கும் பொருட்களை அந்நிருவனமே நுண் உரம் தயாரிப்பு அமைப்பு மூலம் மக்கிய உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இப்பணியை நல்லமுறையில் செயல்படுத்தும் பள்ளிகள், உணவகங்களுக்கு, பாராட்டு சான்று வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது, இதனால் நகரம் தூய்மையாக உள்ளது, என்றார். நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றும் பணியினை செய்யும் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில் நுண்ணுரம் தயாரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகளை பிளாஸ்டிக், கண்ணாடி, கல், போன்றவற்றை அகற்றி அதை இயந்திரம் மூலம் தூளாக்கி மக்கும் தொட்டிகளில் கொட்டப்பட்டு அதில் இயற்கை நுண்ணுயிர் கொண்ட பஞ்சகவ்யா இடுபொருள் தெளித்து முப்பது நாட்களில் நல்ல தரமான இயற்கை உரமாக மாற்றி அதை நெல், காய்கறி, பருத்தி, தானியங்கள், வாழை, தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, இவ்வுரத்தில் தழைசத்து, மணிசத்து, சாம்பல் சத்து, நைட்ரஜன் சத்து என வேளாண் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது என்றார் இப்பணியை சேவையாக செய்வதாகவும், குப்பை மேலாண்மை குறித்து நகராட்சியுடன் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: