×

முன்னோர் வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் கீழடி: தமிழ்க் கூடல் நிகழ்வில் தகவல்

மதுரை, பிப்.25: முன்னோர் வாழ்க்கையின் வரலாற்று ஆதாரமாக கீழடி உள்ளதாக தமிழ்க் கூடல் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு நேற்று நடந்தது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் அன்புச்செழியன் துவக்கவுரையாற்றினார். பேராசிரியர் அருணன் மதுரைக்காஞ்சியும் மாமதுரையும் எனும் தலைப்பில் பேசுகையில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சங்க இலக்கியத்தை வழங்கிய பெருமை உலக மாந்தர்களில் தமிழனுக்கு மட்டுமே உண்டு. சரித்திரத்தைப் படிக்க முடிந்தவனால் மட்டுமே சரித்திரத்தைப் படைக்க முடியும்.

நம்முடைய முன்னோர்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரமே கீழடி. மதுரைக்காஞ்சி நகரவாழ்வைக் காட்டுகிறது. மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் வெகுஜன மக்களைப் பாடியுள்ளார். இது யதார்த்தவாத இலக்கியம் ஆகும். மதுரைக்காஞ்சியில் மாடம், புரவி, செஞ்சுவர் ஆகிய சொற்கள் மக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்ய உதவும் சொற்களாகக் கூறலாம். செஞ்சுவர் என்பதில் செங்கல் சுவர் இருந்ததும், மாடத்தின் நிழலில் பண்டங்கள், பன்னியங்கள் விற்பனை செய்யப்பட்டதையும் மதுரைக்காஞ்சி பதிவுசெய்கிறது. பன்னியம் என்ற சொல் பனியாரத்தைக் குறிக்கும். கடல் வாணிபம் நடைபெற்றதும் தெரியவருகிறது. சமணப்பள்ளி, பவுத்தப்பள்ளியில் பூ மற்றும் புகை போடும் வழக்கம் இருந்ததும் மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கடல்வாணிபம் போன்ற ஏற்றமான நிலையும், இன்னொரு பக்கம் பரத்தையர் வாழ்வினைப் பற்றியும் யதார்த்தமான வாழ்வியலைச் சித்தரிக்கிறது என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார். இந்நிகழ்வில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Kudal ,
× RELATED செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா