பாலின மறுசீரமைப்பு சிகிச்சை துறையில் முன்னோடியாக திகழும் மதுரை அரசு மருத்துவமனை: வெளிமாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற மூன்றாம் பாலினத்தவர் வருகை

மதுரை, பிப்.25: மதுரை அரசு மருத்துவமனையின் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயர் சிகிச்சை சிறப்பு பிரிவு திருநங்கைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. மேலும் இச்சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனை முன்னோடியாக விளங்குகிறது. கடந்தாண்டு சுமார் 105 பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயர் சிகிச்சை சிறப்பு பிரிவு உள்ளது. இதில் ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கை மற்றும் திருநம்பி) இந்த சிறப்பு பிரிவு, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல் பேரில் செயல்படுகிறது.

இந்த சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவு எண் 4ல் வியாழக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செயல்படுகிறது. செயற்கை மார்பகம் பொருத்துதல், பிறப்பு உறுப்பு மாற்றுதல் அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை நீக்குதல், குரல் மாற்றம் சிகிச்சை, முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீக்கம், பாலின மாற்ற ஹார்மோன் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, பால்வினை நோய் தடுப்பு சிகிச்சை என மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து சிறப்பு பிரிவின் மருத்துவ நிபுணர் குழு ஒரே இடத்தில் தனி வார்டு வசதியுடன் இங்கு செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சென்னை, கோவை, புதுக்கோட்டை, தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் மதுரை அரசு மருத்துவமனையின் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அதிகளவு வருகின்றனர்.

இதனால் வெளி மாநிலங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் சிரமமான நிலை தவிர்க்கப்பட்டு எளிதாக சிகிச்சை பெறும் சிறப்பு வசதி தற்போது உள்ளது. இதனால் பாலின மறுசீரமைப்பு சிகிச்சை துறையில் மதுரை அரசு மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து மூன்றாம் பாலினத்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலை தற்போது மாறியுள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான இப்பிரிவில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், ‘‘பாலின மாற்றத்திற்கு சட்டப்பூர்வ உறுதிமொழி சான்றிதழை சமர்ப்பிப்பது இந்த சிகிச்சைக்கு முக்கியம்.

18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மட்டுமே அவர்களின் ஒப்புதலுடன் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர்களை மருத்துவ நிபுணர்கள் குழு பரிசோதித்த பிறகு மனநல மருத்துவரால் மாற்றுத்திறனாளி என மதிப்பிடப்படும். தொடர்ந்து பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாலின மாற்று அறுவை சிகிச்சை நிரந்தரமானது மற்றும் மாற்றத்தக்கது அல்ல. அகச்சுரப்பியல் மருத்துவ நிபுணர், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரக இயல் அறுவை சிகிச்சை நிபுணர், செயற்கை மார்பக அறுவை சிகிச்சை நிபுணர், மகளிர் நல சிகிச்சை நிபுணர், உளவியல் நிபுணர், தோல் நோய் நிபுணர், பால்வினை நோய் தடுப்பு நிபுணர் என மருத்துவ நிபுணர் குழு மூலம் ஒரே இடத்தில் இந்த சிறப்பு வசதி உள்ளது.

எனவே அரசின் வழிகாட்டுதல்படி 18 வயது நிரம்பிய பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள், உளவியல் மருத்துவ ஆலோசனையை குறைந்தது மூன்று மாதங்களும், ஹார்மோன் மருத்துவ சிகிச்சையை ஆறு மாதங்களும் எடுத்துக் கொண்டு வெளித் தோற்றத்தில் மற்றும் உடையில் திருநங்கை மற்றும் திருநம்பியாக ஒரு ஆண்டும் கண்டிப்பாக மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மூன்றாம் பாலினம் அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையும் வியாழக்கிழமை தோறும் நடக்கிறது. பரிசோதனைக்கு பிறகு சமூக நலத்துறையை அணுகி அவர்கள் நிரந்தர அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

சமூக நலத்துறையின் அடையாள அட்டை மற்றும் பல்வேறு சலுகைகள் பெற மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் அவர்களை பணியிடத்தில் சேர்க்க வேண்டும். திருநங்கைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பை அரசு வழங்கி வருகிறது’’ என்றனர். திருநங்கைகள் கூறும்போது, ‘‘பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக முன்பு மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அதிக பணமும் தேவைப்பட்டது. தற்போது மதுரை அரசு மருத்துவமனையின் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவு வரப்பிரசாதமாக உள்ளது’’ என்றனர்.

Related Stories: